முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின்போது தமிழ் மக்கள் கண்ணீர் விட்டது போல் 17 வருடங்களுக்கு பின்னர் இன்று அதே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் கண்ணீர் விடுகிறது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீது இன அழிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, 'தமிழின அழிப்பு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு முன்னால் கொட்டும்
மழைக்கு மத்தியில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, கஞ்சிப் பகிர்வை ஆரம்பித்துவைத்தார். இந்த தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடத்தப்பட்டது மே மாதத்திலாகும் என நினைவூட்டிய அவர், இந்த மாதத்தில் மருத்துவம், உணவு இன்றி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பட்டினியை எதிர்நோக்கியதுடன் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதாகவும் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன அழிப்பு இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டமையையும் தர்மலிங்கம் சுரேஸ் குறிப்பிட்டார்.
