தமிழினப் படுகொலை நாளான மே 18 ஆம் திகதியை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவனிட்டா நாதன் ஆகியோரினால் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் மே மாதம் ஐந்தாம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.
ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலியுடன் இந்த நிகழ்வு இனிதே ஆரம்பமானது. இந் நிகழ்வில் உரையாற்றிய கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் “தமிழ் மக்களின் உரிமை தமிழ் மொழியின் உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் எமது நிலம் மற்றும் கலாசார உரிமைகளுக்காக பல தசாப்தங்களாகத் தமது உயிரைத் தியாகம் செய்தவர்களின் உறுதிப்பாடுதான் மிக முக்கியமானது.
2009ஆம் ஆண்டின் பின்னர் இந்த அறையில் கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய பாதையில் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர். பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பயணம் என்பது இன்னும் முடியவில்லை. அது தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படவேண்டியது”எனத் தெரிவித்தார்.
அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையூடனும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவூம் கரி ஆனந்தசங்கரி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
2022ஆம் ஆண்டு கனேடிய நாடாளுமன்றத்தில் மே 18 ஆம் திகதியை தமிழினப் படுகொலையாக பிரகடனம் செய்யப்பட்டமையும் இலங்கை அரசத் தலைவர்கள் மீதான தடை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான மைய குழுவில் கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொன்ரியல் நகரசபை உறுப்பினரான மிலானி தியாகராஜா இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றியிருந்தார். மே 18ஆம் திகதி நினைவூகூரல் என்பது தமிழர் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஒரு துயர் மிகுந்த அத்தியாயம் எனவும் கனடாவில் உள்ள தமிழர்களுக்கு இது ஒரு நெருக்கமான வரலாறு எனவும் எமது குடும்பங்களிலும் கதைகளிலும் அது நிறைந்திருக்கின்றது எனவும் நினைவூகளில் துயரமாகவும் போராட்டத்தின் அடையாளமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட் ஜீனஸ் தமிழ் உரிமைகளுக்கான தொடர்ந்தும் குரல் கொடுப்பதற்கான உறுதிப்பாட்டை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்றினைச் சேர்ந்தவராக தன்னால் இந்த நீதிக்கான பயணத்தை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கார்ல்டன் மற்றும் ஒட்டாவா பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கான நீதிக்கான பயணம் தொடரும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்வினை நிறைவு செய்யும் வகையில் உரையாற்றிய ஜூவனிட்டா நாதன் அவர்கள் தமிழினப் படுகொலை நினைவு நாளின் முக்கியத்துவத்தை வலியூறுத்தியதுடன் நீதியை நோக்கிய பயணத்தில் கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.


