16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy Drinks) எனப்படும் சக்தி பானங்களை விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் என கியூபெக் மாகாண அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சுகாதார அமைப்புகள் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. அதிகப்படியான கெஃபைன் (Caffeine) கலந்த இந்த பானங்கள் சிறுவர்களின் இதய ஆரோக்கியம் மற்றும் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதாகக் கூறி, 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று கியூபெக் சுகாதார அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளன.
தற்போது கியூபெக்கில் இத்தகைய பானங்களைச் சிறுவர்கள் வாங்குவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு கேன் எனர்ஜி பானத்தில் ஆறு கேன் கோலாவிற்குச் சமமான கெஃபைன் உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் காட்டி சிறுவர்களைக் கவரும் நிறுவனங்களின் உத்திகளைத் தடுக்க வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் கோரியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கியூபெக் பள்ளி மாணவர்களிடையே இந்த பானங்களின் பயன்பாடு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. சில கடைகள் தாமாகவே வயதுச் சான்றிதழைக் கேட்டு விற்றாலும், கியூபெக் மாகாணம் முழுவதும் இதற்கென ஒரு பொதுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
