கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் அதேவேளையில், மக்களின் அடிப்படைச் சட்ட உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்றும், அதற்காகச் சர்வாதிகாரப் போக்குடைய சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் சட்ட வல்லுநர்கள் கியூபெக்மாகாண அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கியூபெக்கின் பொது மொழியாகப் பிரெஞ்சு இருப்பதை உறுதி செய்வது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவித்த அவர்கள், ஆனால், இதற்காகக் கொண்டுவரப்படும் Bill 96 போன்ற சட்டங்கள், நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காக Notwithstanding Clause எனும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரெஞ்சு மொழியை வளர்ப்பது என்பது மற்ற மொழிகளைப் பேசுவோரின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக் கூடாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முதியவர்கள் அல்லது அவசர கால சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் சேவையைப் பெறுவது ஒரு மனித உரிமை எனக்குறிப்பிட்டுள்ள சட்ட வல்லுநர்கள், அந்த மனித உரிமையை நோயாளிகளுக்கு வழங்குவது பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாது எனவும் கூறியுள்ளனர்.
சிறு வணிக நிறுவனங்கள் மீது கடுமையான மொழி நிபந்தனைகளைத் திணிப்பதற்குப் பதிலாக, அவர்களை ஊக்குவிக்கும் முறைகளைக் கையாளுமாறு கியூபெக் அரசிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
