கியூபெக் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette), அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரை (Jamieson Greer) வாஷிங்டனில் சந்தித்து, கியூபெக் மாநிலத்தின் வர்த்தக நலன்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஃப்ரெச்செட் மேற்கொள்ளும்
முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். எதிர்வரும் ஜூலை 1-ஆம் திகதி கனடா-அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) மறுசீரமைக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்கவரான ஜேமிசன் கிரீரை கியூபெக் மாநிலத்தின் புதிய
முதலமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார்.
கியூபெக் மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 74 சதவீதம்
அமெரிக்காவிற்கே செல்கிறது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா விதித்து வரும் வர்த்தக வரிகளால் (Tariffs) கியூபெக்கின் அலுமினியம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வரிகளைக் குறைத்து, கியூபெக் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஃப்ரெச்செட் கலந்துரையாடினார்.
மேலும், அமெரிக்காவிற்கான கனடா தூதுவர் மார்க் வைஸ்மேனையும் அவர் சந்தித்துப் பேசினார். கியூபெக்கின் பால் பண்ணைத் துறையைப் பாதுகாக்கும் வழங்கல் முகாமைத்துவ முறைக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அதனைத் தற்காத்துப் பேசுவதில், கியூபெக் மாநிலத்தின் புதிய முதலமைச்சர்
ஃப்ரெச்செட் உறுதியாக உள்ளார்.
கியூபெக்கில் வரும் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஃப்ரெச்செட்டிற்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது.
அமெரிக்காவின் அமெரிக்காவிற்கே முன்னுரிமை (America First) என்ற கொள்கைக்கு மத்தியில், கியூபெக்கின் பொருளாதாரத்தைப்
பாதுகாப்பதற்கான ஒரு ராஜதந்திர முயற்சியாக இந்தப் பயணம்
பார்க்கப்படுகிறது.
வாஷிங்டனில் நிலவும் தற்போதைய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், கியூபெக்கின் குரலை அமெரிக்காவின் அதிகார மையத்தில் ஒலிக்கச்செய்வதில் முதலமைச்சர் ஃப்ரெச்செட் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
