நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரண்டு ஏர் கனடா (Air Canada) விமானிகளுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ‘ஜாக்-டி-லெசெப்ஸ்’ (Jacques-de-Lesseps) பூங்காவில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.
கப்டன் அன்டோயின் ஃபாரஸ்ட் மற்றும் உதவி விமானி மெக்கன்சி குந்தர் ஆகியோரின் நினைவாக, மொன்றியல் விமான நிலைய அதிகாரசபை (ADM) இதனை நிறுவியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த மார்ச் 22-ஆம் திகதி மொன்றியலிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்ற ஏார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அங்கிருந்த தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இரண்டு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னர், விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் இந்தப் பூங்காவில் கூடி மலர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டே இங்கு நிரந்தர நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
