மனநலம் குன்றிய நபர்களை, அவர்களின் அனுமதியின்றி கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான விதிகளைத் தளர்த்தும் புதிய சட்டமூலத்தைக் கியூபெக் அரசு தாக்கல் செய்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள ‘Bill P-38’ சட்டத்தின்படி, ஒரு நபர் தமக்குத் தாமே அல்லது சமூகத்திற்கு “உடனடி மற்றும் கடுமையான” (Serious and Immediate) ஆபத்தை விளைவிப்பவராக இருந்தால் மட்டுமே அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்க முடியும்.
ஆனால், அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) தாக்கல் செய்துள்ள ‘Bill 23’ இந்த விதியை மாற்றியமைக்கிறது.
இனி “உடனடி ஆபத்து” என்ற நிலைக்காகக் காத்திருக்கத் தேவையில்லை எனவும் ஒருவரது மனநிலை மோசமடைந்து வருவதாகக் கருதப்பட்டாலே அவரை 7 நாட்கள் வரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கலாம் எனவும், இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.
எனினும் ஒரு வாரத்திற்கு மேல் ஒருவரைத் தடுத்து வைக்க வேண்டுமானால், கியூபெக் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (Administrative Tribunal) அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
