மொன்றியலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகர் (Old Montreal) பகுதியில் நேற்று நடைபெற்ற ‘சிலுவைப் பாதை’ (Way of the Cross) ஊர்வலத்தில், கியூபெக் அரசின் புதிய Bill 9 சட்டம் குறித்த அச்சம் மேலோங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
புனித வெள்ளிக்கு ஒரு நாள் முன்னதாக நிறைவேற்றப்பட்ட இந்த Bill 9 சட்டம், பொது இடங்களில் மத ரீதியான வழிபாடுகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கியூபெக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி, வீதிகள் அல்லது பொதுப் பூங்காக்களில் கூட்டாக மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த முடியாது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான ஊர்வலங்களை நடத்த வேண்டுமானால், அந்தந்த நகர சபையிடம் (Municipality) ஒவ்வொரு முறைக்கும் தனித்தனியாக உத்தியோகபூர்வ அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாறக்கூடாது என்பதையும், அரசு மதம் சார்ந்த விவகாரங்களில் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதையுமே இந்தச் சட்டம் உறுதிப்படுத்துவதாக, கியூபெக் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊர்வலத்தை வழிநடத்திய மொன்றியல் பேராயர் கிறிஸ்டியன் லெபீன் (Christian Lépine), இச்சட்டத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
“விளையாட்டுப் போட்டிகளுக்கும், போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் அரசு, மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு மட்டும் கூடுதல் நிபந்தனைகளை விதிப்பது எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக மாற்றுவது போன்றது” என, கியூபெக் கத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் மார்ட்டின் லாலிபெர்டே (Martin Laliberté) கவலை வெளியிட்டுள்ளார்.
பிரார்த்தனைகளை வீட்டிற்குள்ளேயே முடக்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த சுதந்திரத்தைப் பாதிக்கும் எனவும் பேராயர் எச்சரித்துள்ளார்.
