மொன்றியல் (Montreal) பெருநகரப் பகுதியில் வீசிய திடீர் பலத்த சூறாவளி மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழையின் போது, லாசால் (LaSalle) பேராலய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த இராட்சத பலூன் விளையாட்டுத்திடல் ஆனது, காற்றில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்து மாத்ரே டெய் கிரிஸ்டியானி (Madre Dei Cristiani Church) தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைக்காலக் குடும்பக் கொண்டாட்டத்தின் போதே நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் ஒரு குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவசர மருத்துவச் சேவைகள் பிரிவு (Urgences-santé) தெரிவித்துள்ளது.
கனடா வானிலை ஆராய்ச்சி மையத்தின் (Environment Canada) தரவுகளின்படி, விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையான காற்றழுத்தச் சுழல் பதிவாகியுள்ளது. காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், தரையோடு பிணைக்கப்பட்டிருந்த பலூன் கட்டமைப்பு அப்படியே காற்றில் பறந்து சென்று விழுந்ததாகத் தெரியவருகின்றது.
இந்தத் தீவிரமான காலநிலை காரணமாக லாசால் பகுதி மட்டுமன்றி, ஒட்டுமொத்த மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள லாவால் (Laval), லோங்குயில் (Longueuil) ஆகிய பிராந்தியங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
