கியூபெக்கின் வடகரையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ அவசர சேவை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூன்று பேரின் சடலங்கள் வாட்ஷிஷூ (Watshishou) ஏரியில் இருந்து மீட்கப்பட்டதை காவல்துறை நீச்சல் வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம், கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது.
மொண்ட்ரியல் பகுதியைச் சேர்ந்த ‘ஏர்மெடிக்’ (Airmedic) என்ற நிறுவனம், தமது காணாமல் போன இரண்டு ஊழியர்கள் மற்றும் ஒரு நோயாளியின் உடல்கள் மொண்ட்ரியலுக்கு வடகிழக்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ஷிஷூ ஏரியில் கியூபெக் மாகாண காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஒரு மருத்துவ இடமாற்றப் பணியில் ஈடுபட்டிருந்தது.
விபத்து நடந்த அன்றே, ஒரு ஆண் ஊழியர் – உயிர் தப்பியதுடன், உயிருக்கு ஆபத்தான காயங்கள் இன்றி மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள், அவர்களின் குடும்பத்தினர் அனுமதி அளித்தவுடன் மரண விசாரணை அலுவலகத்தால் (coroner’s office) வெளியிடப்படும் என்று ஏர்மெடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை (Transportation Safety Board of Canada) இந்த விபத்து குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.