ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ (Michael Rousseau) நாடாளுமன்றக் குழுவின் முன் நேர்நின்று விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து, ஏர் கனடா நிறுவனம் ஆங்கிலத்தில் மட்டுமே இரங்கல் செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒரு விமானி, பிரெஞ்சு மொழியை நிர்வாக மொழியாகக் கொண்டுள்ள கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ வெளியிட்ட 4 நிமிட இரங்கல் செய்தியில், ‘bonjour’, ‘merci’ ஆகிய இரண்டு சொற்களைத் தவிர, மற்ற அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன.
இது கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon), இந்தச் செயலை “மிகுந்த மரியாதைக்குறைவானது” எனச் சாடியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட கியூபெக் குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒருவர், இந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியானவரா என்பதை அவரே சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
