கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டங்கள் “சுயநலமானவை மற்றும் அநீதியானவை” என உலகின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க் (Elon Musk) கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ, பிரெஞ்சு மொழியில் பேசாத காரணத்திற்காகப் பதவியிலிருந்து விலக நேரிட்ட விவகாரத்தைத் தொடர்ந்தே எலோன் மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏர் கனடா விமான விபத்து குறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ வெளியிட்ட இரங்கல் செய்தி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தது.
கனடாவின் சட்டப்படி, தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் உரையாற்ற வேண்டும்.
இந்தப் பிழையினால் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஏர் கனடா தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ நேற்று தனது ஓய்வை அறிவித்தார்.
இதனையடுத்து, தமது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துக் பதிவிட்டுள்ள எலோன் மஸ்க், ஒரு நிறுவனத்தைத் திறம்பட வழிநடத்தும் திறமையை விட, மொழி அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஒரு நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
4 நிமிட வீடியோவில் ஒரு மொழியைப் பயன்படுத்தவில்லை என்பதற்காக ஒரு தலைவரைப் பதவி விலகச் செய்வது “அறிவீனமானது” என்றும், இது உலகளாவிய திறமையாளர்கள் கனடாவுக்கு வருவதைத் தடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் மொழி உலகளாவியது என்றும், மொழிச் சட்டங்கள் என்ற பெயரில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பது முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும் என்றும் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
