அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட கியூபெக் மாகாண பட்ஜெட்டில், மொன்றியல் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, மொன்றியல் மாநகர மேயர் சோரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) குற்றம் சாட்டியுள்ளார்.
வீடற்றோர் பிரச்சினை மற்றும் பொதுப் போக்குவரத்துச் சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட்டில் போதிய தீர்வு இல்லை என அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மொன்றியல் மாநகர சபையானது, ஏற்கனவே தனது பட்ஜெட்டில் வீடற்றோர் நலனுக்காக நிதியை மும்மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், கியூபெக் மாகாண அரசு இதற்கு இணையான ஆதரவை வழங்கவில்லை என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
2050-ஆம் ஆண்டிற்குள் 75,000 வீடுகளைக் கட்டும் மொன்றியல் மாநகரத்தின் இலக்கை எட்ட, கியூபெக் மாகாண அரசின் பெரும் நிதி உதவி அவசியம் என்ற நிலை காணப்படுகின்றது.
மொன்றியல் பொதுப் போக்குவரத்து ஆணையம் (STM) பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கியூபெக் மாகாண அரசு அதனை மீட்க முன்வராதது கவலையளிப்பதாக மொன்றியல் மேயர் தெரிவித்தார்.
உரிய நிதி கிடைக்காவிட்டால், மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது மாநகரத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் மொன்றியல் மாநகர மேயர் சோரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) எச்சரித்துள்ளார்.


