கியூபெக் மாகாணத்தில் உள்ள பொதுப் பாடசாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ள கத்தோலிக்கப் புனிதர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பொதுவான பெயர்களைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரபல அரசியல் ஆய்வாளர் ரபேல் மெலன்சன் (Raphaël Melançon) முன்வைத்துள்ள இந்தக் கருத்து, மாகாணத்தில் மீண்டும் மதச்சார்பின்மை குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. கியூபெக்கில் தற்போது பல பாடசாலைகள் செயிண்ட்-ஜஸ்டின் (Saint -Justin) அல்லது கார்டினல்-ராய் (Cardinal-Roy) போன்ற கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன.
கியூபெக் மாகாண அரசு பில் 21 (Bill 21) சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையை வலியுறுத்தி வரும் நிலையில், பொதுக் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்கள் இருப்பது முரண்பாடானது என மெலன்சன் வாதிடுகிறார்.
ஆசிரியர்கள் மத அடையாளங்களை அணியக் கூடாது என்று சொல்லும்அரசு, பாடசாலைக் கட்டிடங்களுக்கு மட்டும் மதப் பெயர்களை வைத்திருப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புனிதர்களின் பெயர்களுக்குப் பதிலாக, கியூபெக் வரலாற்றில் தடம் பதித்த கலைஞர்கள், விஞ்ஞானிகள் அல்லது சமூகப் போராளிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று மெலன்சன் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், இது கியூபெக்கின் நீண்டகாலக் கலாச்சார அடையாளத்தை அழிக்கும் செயல் எனப் பாரம்பரியவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
