கியூபெக் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஒரே மாதத்தில் மட்டும் கியூபெக் மாகாணத்தில் 57,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இதனால் மாகாணத்தின் வேலையில்லா திண்டாட்ட விகிதம் (Unemployment Rate) 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 84,000 வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன.
இதில் பாதிக்கும் மேற்பட்ட இழப்புகள் கியூபெக் மாகாணத்திலேயே நிகழ்ந்துள்ளன. பொருளாதார வல்லுநர்கள் 10,000 புதிய வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தத் திடீர் சரிவு கனேடியப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில்லறை வணிகம் (Retail), மொத்த விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் சேவைகள் போன்ற துறைகள் இந்தச் சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு தழுவிய அளவில் சுமார் 1,08,000 முழுநேர வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 14 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், தற்போது பணியில் இருப்பவர்களின் சராசரி மணித்தியால ஊதியம் (Average Hourly Wage) கடந்த ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு மணி நேரத்திற்கான சராசரி ஊதியம் 37.56 டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
