கியூபெக் மாகாணத்தின் புதிய அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை ஒரு சட்டபூர்வ உரிமையாகச் சேர்க்கும் முடிவை, கியூபெக் மாகாண அரசு அதிரடியாகக் கைவிட்டுள்ளது. கியூபெக் மாகாண நீதித்துறை அமைச்சர் சைமன் ஜொலின்-பாரெட் (Simon JolinBarrette), இதற்கான சட்டப்பிரிவு மசோதாவிலிருந்து நீக்கப்படும் என்று அறிவித்தார்.
கியூபெக் அரசு கொண்டு வந்துள்ள மசோதா-இன் ஆவணத்தில், பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்துகொள்ளும் சுதந்திரத்தை கியூபெக் அரசு பாதுகாக்கும் என ஒரு பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கியூபெக் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு கூறியது.
ஆனால், இதற்குப் பெண்கள் நல அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கருக்கலைப்பு ஒரு மருத்துவச் சேவையாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இப்போது மாகாண அரசு தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால், அதைப் பயன்படுத்தி கருக்கலைப்புக்கு எதிரான அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வழிவகை ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
