கியூபெக்கில் உள்ள அதிகபட்சமான பாதுகாப்பு நிறைந்த சிறையிலிருந்து 225 கைதிகளை கனடா அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கியூபெக் பகுதியில் காட்டுத்தீ வியாபித்துவரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளை வெளியேற்றும் உத்தரவானது வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட கைதிகள் அனைவரும் விளக்கமேதும் அளிக்கப்படாமல் இன்னொரு அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் குற்றவாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே, 225 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ சம்பவமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை மிகக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
2023ல் காட்டுத்தீயால் அழிந்த நிலப்பரப்பின் அளவு 15 மில்லியன் ஹெக்டேர் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், சராசரியை விட மற்றொரு வெப்பமான கோடை காலம் எதிர்பார்க்கலாம் என்று பெடரல் அரசாங்கம் கணித்துள்ளது. இதனிடையே, தற்போதைய நெருக்கடியான சூழல் நீடிப்பதாகவும்,
கியூபெக்கில் எப்போது அதிகபட்ச பாதுகாப்பு சிறையை திறக்க முடியும் என்பது தொடர்பில் ஆலோசனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.