கியூபெக் மாகாணத்தில் செயல்படும் பெரிய அளவிலான தரவு மையங்கள் (Data Centres) மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்க நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துவதற்கு, ஹைட்ரோ – கியூபெக் (Hydro-Québec) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கியூபெக் மாகாண எரிசக்தி வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தின்படி, கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயரவுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள மலிவான தொழிற்சாலை மின்சாரக் கட்டணங்கள், இந்தத் துறைகளின் அதீத மின் பயன்பாட்டிற்குப் போதுமானதாக இல்லை என்று ஹைட்ரோ-கியூபெக் தெரிவித்துள்ளது.
5 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மையங்களுக்கு ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 13 Cents கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள கட்டணத்தை விட இரண்டு மடங்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் தலைமையிலான அரசு, மாகாணத்தின் இயற்கை வளமான மின்சாரத்தைச் சரியான விலைக்கு விற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
2035-ஆம் ஆண்டிற்குள் கியூபெக் மாகாணத்தில் தரவு மையங்களின் மின்சாரத் தேவை தற்போது இருப்பதை விட 7 மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
