கனடா மற்றும் அமெரிக்க எல்லைகளைக் கடக்கும் பழங்குடியின மக்கள், முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சோதனைகளுக்கும், தேவையற்ற கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பழங்குடியின தலைவர்கள் மற்றும் அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (AFN) அமைப்பு தங்களது மக்களுக்கு அவசரப் பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக, ஜே ஒப்பந்தத்தின் (Jay Treaty) கீழ் பழங்குடியின மக்கள் தங்களது ஸ்டேட்டஸ் கார்டு (Status Card) மூலமாகவே எல்லைகளைக் கடந்து வந்தனர். ஆனால், தற்போது அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் (ICE), இந்த அடையாள அட்டைகளை ஏற்க மறுப்பதாகவும், பழங்குடியினரைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிகாரிகளுக்குப் பழங்குடியினரின் எல்லைக் கடந்த பயண உரிமைகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, தேவையில்லாத ஆபத்துகளைத் தவிர்க்க, மிக அவசியமான தேவைகளுக்குத் தவிர மற்ற நேரங்களில் எல்லை தாண்டிய பயணங்களைத் தவிர்க்கவும், என ஓகனகன் நேஷன் அலையன்ஸ் (Okanagan Nation Alliance) உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பழங்குடியினத் தலைவி சிண்டி வுட்ஹவுஸ் நெபினாக் இது குறித்துக் கூறுகையில், ”எல்லைகளில் நிலவும் கணிக்க முடியாத சூழல் காரணமாகக் குடும்பங்கள் பிரிக்கப்படும் அபாயம் உள்ளதாக” எச்சரித்துள்ளார்.
இந்த அசாதாரண சூழல் காரணமாக, வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெறவிருந்த பல முக்கியக் கூட்டங்களில் பங்கேற்பதைக் கனடியப் பழங்குடியின அமைப்புகள் ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
