டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவின் பிரபல அரசியல்வாதியான ஆன் மெக்ராத் (Anne McGrath), 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் எதிர்கொண்ட இதே போன்றதொரு கோரச் சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
என்.டி.பி (NDP) கட்சியின் மூத்த பிரமுகரான இவர், தான் ஒரு துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்தவர் என்ற உண்மையை முதன்முறையாக உலகிற்குத் தெரிவித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி அன்று, ஒட்டாவாவில் உள்ள செயின்ட் பயஸ் (St. Pius X) மேல்நிலைப் பள்ளியில், மெக்ராத் 17 வயதுடைய மாணவியாக இருந்தபோது, மெக்ராத்தின் கண்முன்னே சக மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.
ராபர்ட் பூலின் என்ற அந்த மாணவன், தனது வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக, மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மெக்ராத்தின் நண்பன் மார்க் ஹக் (Mark Hough) படுகாயமடைந்து, ஒரு மாதம் கழித்து உயிரிழந்தார்.
”அந்த அதிர்ச்சியிலிருந்து மீள யாருமே எங்களுக்கு உதவவில்லை” என, ஆன் மெக்ராத் வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதைப் பாராட்டிய மெக்ராத், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேசத்தின் அன்பு மற்றும் நீண்ட கால ஆதரவு தேவை என வலியுறுத்தியுள்ளார்.


