மேற்குக் கரையில் (West Bank) உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குச் செல்ல முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்ட கனடியத் தூதுக்குழுவினர், தற்போது இஸ்ரேல் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கனடிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும், கனடிய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கனடியத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இக்ரா காலித் (Iqra Khalid), இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு வீரரால் தள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாம் அங்குள்ள மக்களின் நிலையை நேரடியாகக் காணச் சென்றதாகவும், ஆனால் தங்களை ஒரு தீவிரவாதக் குழுவைப் போல இஸ்ரேல் நடத்தியது எனவும் அந்த தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
