கடந்த சில மாதங்களாக வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் (Extortion) சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளின் நிதி ஆதாரத்தைத் துண்டிக்கும் புதிய பணத்தைப் பின்தொடர் (Follow the Money) திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த மத்திய நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கையின் கீழ், கனடாவின் நிதிப் புலனாய்வு அமைப்பான FINTRAC, உள்ளூர் காவல்துறையுடன் நேரடியாக இணைந்து செயல்படும். இத்திட்டத்தின்படி, மிரட்டிப் பணம் பறிப்பவர்கள் கோரும் பணம் எங்கே செல்கிறது என்பதை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உதவியுடன்
அதிகாரிகள் உடனுக்குடன் கண்டறிவார்கள்.
சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்களை முடக்குவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகள் நேரடியாகக் காவல்துறையினருடன் களத்தில் இறங்கி, குற்றப் பின்னணியில் உள்ள பணப்பரிமாற்றங்களை முறியடிப்பார்கள்.
இந்த மிரட்டல் சம்பவங்களால் குறிப்பாக பீல் (Peel), சர்ரே (Surrey) மற்றும் அபோட்ஸ்ஃபோர்ட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தென்னாசிய வணிகர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
