கியூபெக் மாகாணத்தில் நிலவும் சுகாதாரத் துறை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், வோட்ராய்-டோரியன் (Vaudreuil-Dorion) பகுதியில் சுமார் 7 பில்லியன் டொலர் செலவில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றைக் கட்டும் பணிகளை மாகாண அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
வோட்ராய்-சோலஞ்ச் பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக முறையான மருத்துவ வசதி இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் அவசர சிகிச்சைக்குக் கூட பல மைல் தூரம் பயணித்து மொண்ட்ரியல் நகரத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த இன்னல்களைப் போக்கவும், அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றவும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படுகிறது. நோய்த்தொற்றைத் தவிர்க்கவும், நோயாளிகளின் தனிமனித உரிமையை மதிக்கவும் என, மருத்துவமனையின் அனைத்து 404 படுக்கைகளும், தனித்தனி அறைகளில் அமைக்கப்படுகின்றன.
ஆண்டுக்கு சுமார் 40,000 நோயாளிகளைக் கையாளக்கூடிய திறன் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 11 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளும் இதில் இடம்பெறுகின்றன.
