ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கியூபெக் மாகாணத்தின் முன்னாள் இதயச்சிகிச்சை நிபுணர் கய் டூர்கொட்டின் (Guy Turcotte) பரோல் கோரிக்கை மீதான அதிகாரப்பூர்வ விசாரணைக்கான திகதி தற்போது குறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் தனது சொந்தக் குழந்தைகள் இருவரை குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது 5 வயது மகன் மற்றும் 3 வயது மகளை மொத்தம் 46 தடவைகள் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், 17 ஆண்டுகள் பரோல் பெற முடியாததும் நிபந்தனையுடன் கூடியதுமான ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் கய் டூர்கொட்டின் பரோல் விண்ணப்பத்தை கனேடிய தேசிய பரோல் சபை (Parole Board of Canada) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
தனது மனைவி இசபெல் காஸ்டன் (Isabelle Gaston) தன்னை விவாகரத்து செய்ய முயன்றதாலும், வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில், கய் டூர்கொட் இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
சிறைச்சாலை ஆவணங்களின்படி, கய் டூர்கொட் தனது குறைந்தபட்ச சிறைக்கால தண்டனையைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், கனேடிய சட்டத்தின் கீழ் பரோல் தகுதித் திகதிக்கு முன்னதாகவே இத்தகைய பூர்வாங்க விசாரணைகளைக் கோர முடியும் என்ற விதிமுறையின் அடிப்படையிலேயே இந்த புதிய நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
