பியர் பானம் தயாரிப்பதைக் கற்பிக்கும் வட அமெரிக்காவின் மிகப்பழமையான கல்லூரியான சீபல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Siebel Institute of Technology), அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து மொன்ட்ரியலுக்குத் தனது முழுச் செயல்பாடுகளையும் மாற்றுகிறது.
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவே, இந்த மாற்றத்தை அந்தப் பள்ளி முன்னெடுத்துள்ளது.
சர்வதேச மாணவர்கள் இன்றி, கல்விச்செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது கடினமாகியுள்ளதாக சீபல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி தனது சமூக ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது
1868 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் புகழ்பெற்ற கல்லூரி, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் செயின்ட்-கேத்தரின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது.
கல்லூரியின் இந்த இடமாற்றம், கியூபெக்கின் வளரும் பியர் தயாரிப்புத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும் என்று உள்ளூர் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
157 ஆண்டுகளாக, அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வந்த இந்த நிறுவனம் அங்கிருந்து வெளியேறியமையானது, அங்குள்ள சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.


