பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க “சில தியாகங்களும்” “சிறிது காலமும்” தேவைப்படும் என்று கனடா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த வரவுசெலவுத்திட்டம் குறித்து ஆற்றிய உரையில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு துணிச்சலான திட்டத்தை அவர் முன்வைத்தார்.
சமீபத்திய பாதுகாப்புவாதக் கொள்கைகள் மற்றும் வரிகள் காரணமாக அமெரிக்காவுடனான வர்த்தக உறவு “அடிப்படையில் மாறிவிட்டது” என்று பிரதமர் கார்னி குறிப்பிட்டார்.
இதனால், அமெரிக்கா தவிர்ந்த பிற நாடுகளுக்கான கனடாவின் ஏற்றுமதியை அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாக மாற்றுவதற்கு ஒரு லட்சிய இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.
வாகன உற்பத்தி, இரும்பு உற்பத்தி, மரப்பொருட்கள் மற்றும் அலுமினியம் போன்ற தொழில்களில் பணியாற்றும் கனடியர்களின் வேலைகள் அச்சுறுத்தலில் உள்ளன என்று அவர் எச்சரித்தார்.
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ள இந்த வரவுசெலவுத்திட்டம், நிதி ஒழுக்கத்தையும் பெரிய முதலீடுகளையும் கலந்த ஒரு திட்டமாக இருக்கும் என்று கார்னி அறிவித்தார்.
