கனடா போஸ்ட் நிறுவனத்தில் (Canada Post) மத்திய அரசு அறிவித்துள்ள அதிரடி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கனடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW) அரசின் இந்த அறிவிப்பால் “கடுங்கோபமும் திகைப்பும்” அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“எங்கள் தபால் சேவை மற்றும் ஊழியர்கள் மீதான அரசின் தாக்குதலுக்குப் பதிலடியாக, கனடா போஸ்ட்டில் உள்ள அனைத்து CUPW உறுப்பினர்களும் உடனடியாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்,” என்று சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப்பணி மற்றும் மாற்றத்திற்கான அமைச்சர் ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound) நிறுவனம் “திவாலாகும்” நிலையில் இருப்பதால் இந்த மாற்றங்கள் அவசியம் என்று விளக்கியிருந்தார்.
சுமார் 40 லட்சம் முகவரிகளுக்கு தற்போதுள்ள வீட்டு வாசலில் தபால் விநியோகம் நிறுத்தப்பட்டு, அவை சமூக தபால் பெட்டிகளுக்கு (Community Mailboxes) மாற்றப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
மேலும், அவசரமில்லாத தபால்களை விமானம் மூலம் அனுப்பாமல் தரை வழியே அனுப்புவதன் மூலம் ஆண்டுக்கு $20 மில்லியன் வரை சேமிக்க கனடா போஸ்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


