இலங்கையின் முதியோர் சனத்தொகை 20240 அடையும் போது 25.04 வீதமாக அதிகரிக்குமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் முதியோருக்கான தேசியக் கொள்கையை (2025-2035) வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்துடன் இணைந்த வகையில் வெளியிடப்படவுள்ளது.
2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, 12.4 வீதமாக ஆக இருந்த நாட்டின் முதியோர் சனத்தொகை 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 18.3 வீதமாக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தரவுகளைச் சமர்ப்பித்துக் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, 2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் முதியோர் சனத்தொகை 25.04 வீதம் வரை உயரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இந்தத் தேசியக் கொள்கை மூலம் அந்தச் சமூகப் பிரிவினருக்கான உரிய கவனிப்பையும், பாதுகாப்பையும் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
