பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான ரவிந்தர் கவுர் சித்து, தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த சில நாட்களிலேயே செப்சிஸ் நோயால் உயிரிழந்தார்.
மிசிசாகாவில் உள்ள கிரெடிட் வேலி மருத்துவமனையின் தாமதமான சிகிச்சையே, இவரது மரணத்துக்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரவிந்தர் கவுர் சித்து ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனது மகனைப் பெற்றெடுத்தார்.
குழந்தைக்குச் சுகப்பிரசவம் நடந்த நிலையில், சில மணி நேரங்களுக்குள்ளாகவே அவருக்குக் கடுமையான நடுக்கம், அதிக ரத்தப்போக்கு, காய்ச்சல் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற செப்சிஸ் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன.
இதனை அவதானித்த குடும்பத்தினர், அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் பலமுறை இந்த அறிகுறிகள் குறித்த முறையிட்ட போதும், “இவ்வாறான அறிகுறிகள் பிரசவத்திற்குப் பின் ஏற்படுவது சாதாரணம்” எனக் கூறப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினரின் முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவத்தாதியாகப் பணிபுரியும் ரவிந்தரின் சகோதரி கிரண்ஜித் கவுர், இணையவழிக் காணொளி அழைப்பில் தனது சகோதரியின் உடல்நிலையைப் பார்த்து எச்சரித்த பின்னரே, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கையைத் தொடங்கியது.
ரவிந்தர் கவுர் சித்துவுக்குச் செப்சிஸ் அறிகுறிகள் தென்பட்டு சுமார் 29 மணி நேரத்திற்குப் பிறகே, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
