ஒட்டாவா விமான நிலையத்திற்கு மேற்கே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட
விமான விபத்தில் அதன் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த மேலும் இருவர் மீட்கப்பட்டு, லேசான
காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் பயணித்த இந்த தனியார் ‘Grumman AA-5A’ ரக விமானம்,
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ரிவர்சைட் டிரைவ் (Riverside Drive)
மற்றும் வெஸ்ட் ஹண்ட் கிளப் சாலை (West Hunt Club Road) சந்திப்பு
அருகே விபத்துக்குள்ளானது.
விமானம் மாலை 5:35 மணியளவில் கத்தீனோ (Gatineau) விமான
நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
பயணத்தின் நடுவே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து, அதிக அளவில்
எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், விமானி அவசர நிலையை அறிவித்துள்ளார்.
ஒட்டாவா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பு
கொண்ட விமானி, 14-வது ஓடுபாதையில் தரையிறங்க அனுமதி
கோரியுள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, விமானம் உயரத்தை இழந்து, ஓடுபாதையை
அடையாமல், மரங்களுக்குள் மோதி விபத்துக்குள்ளானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
