மொன்றியல் நகரிலுள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் (YUL) அடுத்த பத்தாண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
10 பில்லியன் டொலர் மதிப்பிலான மிகப்பெரிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் விமான நிலையத்தின் கொள்ளளவை கணிசமாக அதிகரித்து, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதே இலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு ஆதரவாக, ஏரோபோர்ட்ஸ் டி மொன்றியல் (Aéroports de Montréal – ADM) எனப்படும் மொன்றியல் விமான நிலைய ஆணைக்குழு, கனடாவின் உள்கட்டமைப்பு வங்கியிடமிருந்து (Canada Infrastructure Bank) 1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளது.
ட்ரூடோ விமான நிலையத்திற்கான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சமாளிப்பதற்கு, இந்த விரிவான மேம்பாடுகள் அத்தியாவசியமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 22 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்திய நிலையில், 2028 ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 28 மில்லியனாகவும், 2035 ஆம் ஆண்டில் 35 மில்லியனாகவும் உயரும் என மொன்றியல் விமான நிலைய ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.
