கடந்த 2023 ஆம் ஆண்டு டாவ்சன் நகரத்தில் நடந்த கார் விபத்து தொடர்பாக, சாரதி எரிக் ரவுகுத் (Erich Rauguth) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி காலை, டாவ்சன் சிட்டி குடியிருப்பாளரான ரவுகுத் ஓட்டிச் சென்ற கார், மூஸ் மவுண்டன் பனிச்சறுக்கு மலைக்கு அருகில் உள்ள டோம் வீதியில் ஒரு கதவில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 33 வயதான சமன்ரூப் பிஸ்லா (Samanroop Bisla) என்ற பயணி உயிரிழந்திருந்தார்.
மூச்சுப் பரிசோதனைக்கு தேவையான மூச்சின் மாதிரியை வழங்கத் தவறினார் என்று எரிக் ரவுகுத் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில், ரவுகுத் மீது “போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியமை” என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் வழக்குத் தொடுத்த தரப்பு ஆனது, இந்தக் குற்றச்சாட்டை விலக்கிக்கொண்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிவில், யுகோன் நீதிமன்ற நீதிபதி எரிக் ரவுகுத் ஒரு நிரபராதி என தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு, விபத்தில் உயிரிழந்த சமன்ரூப் பிஸ்லாவின் குடும்பத்தினருக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ள நிலையில், அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற உணர்வு மேலோங்கியுள்ளது.
