கனடாவின் மனிடோபாவில் காட்டுத்தீயால் இடம்பெயர்ந்த டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இருப்பில் உள்ள குடிநீர் குடிக்கவோ, குளிக்கவோ, பாத்திரங்கள் கழுவவோ பாதுகாப்பானது அல்ல என தலைமை அதிகாரி டோரின் ஸ்பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜூன் 4 ஆம் தேதி எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், தண்ணீரில் அதிக அளவு அலுமினியம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் உடனடியாக சமூகத்தின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வீடு திரும்ப வேண்டாம் என்று, தலைமை அதிகாரி டோரின் ஸ்பென்ஸ் மக்களை வலியுறுத்தினர்.
வீடுகளுக்கு மீளத்திரும்புவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம், பிராண்டன், தாம்சன், வின்னிபெக் மற்றும் ஒன்டாரியோவின் நயாகரா நீர்வீழ்ச்சிப்பகுதி ஆகிய இடங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தோருக்கு பெரும் சவாலாக உள்ளது.
மேலும், சமூகத்தில் அத்தியாவசிய ஊழியர்கள் தற்போது இல்லாததால், குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகள், குப்பை அகற்றுதல் போன்ற சேவைகளை வழங்க முடியவில்லை என தலைமை அதிகாரி ஸ்பென்ஸ் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.
