பழங்குடியினரை தாம் “தங்கம் போன்று நடத்துவதாகவும்,” ஆனால் அவர்கள் “எல்லா வேளைகளிலும் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள்” என்றும், ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறிய கருத்துகள், பழங்குடியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கருத்துகள் “தீவிரமான புண்படுத்தும் மற்றும் இனவாத” தன்மை கொண்டவை என புதிய ஜனநாயகக் கட்சி (NDP) நாடாளுமன்ற உறுப்பினர் சோல் மாமாக்வா கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ‘பில் 5’ (Bill 5) சட்டம் தொடர்பாக பழங்குடியினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த சட்டம், “சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்” (Special Economic Zones) உருவாக்குவதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக மாகாண மற்றும் உள்ளூராட்சிச் சட்டங்களை நிறுத்திவைப்பதற்கு, அமைச்சரவைக்கு அதிகாரம் அளிக்கிறது.
பொருளாதார மேம்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க பழங்குடியின தலைவர்கள் விரும்புகிறார்கள் என்றாலும் தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு சட்டத்தை நிறைவேற்றியது அவர்களை சீற்றமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், ஃபோர்டு பழங்குடியினரின் ஒப்பந்த உரிமைகள் மதிக்கப்படும் என்றும், இந்த கோடையில் தொடர்ச்சியான சந்திப்புகள் மூலம் கலந்தாலோசனை செய்வதற்கான கடமையை ஒன்ராறியோ மாகாண அரசு நிறைவேற்றும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தனது அரசின் நல்லெண்ணத்திற்கு ஆதாரமாக, 3 பில்லியன் டொலர் மதிப்புள்ளதும் பழங்குடியினருக்கானதுமான நிதித் திட்டத்தை, ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் சுட்டிக்காட்டினார்.
ஒன்ராறியோ சட்டமன்றத்தில் உள்ள ஒரே பழங்குடியின உறுப்பினருமான சோல் மாமாக்வா, ஃபோர்டின் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“மாகாண முதல்வரின் இன்றைய கருத்துகள் பழங்குடியினரை மிகவும் புண்படுத்தும் வகையிலும் இனவாதமாகவும் அமைந்துள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
”இந்த கருத்துகள், ஒன்ராறியோவின் பழங்குடியினருடனான ஒப்பந்த உறவைப் பற்றி, மாகாண முதல்வருக்கு அடிப்படை புரிதல் இல்லாத நிலையை நிரூபிக்கின்றன” என்றும் சோல் மாமாக்வா கூறினார்.


