கனடாவில் அவசர மருத்துவப் பணியாளர்கள் பணியின்போது எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகப் புதிய தேசிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 1,237 அவசர மருத்துவப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 86 சதவீதமானோர் தமது பணிக்காலத்தில் வாய்மொழி அல்லது உடல் ரீதியான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கடந்த 12 மாதங்களில் மட்டும் 74 சதவீதமானோர் இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மனிடோபா மாகாணத்தைச் சேர்ந்த 27 வருட அனுபவமுள்ள அவசர மருத்துவப் பணியாளர் கரேன் பேல், நோயாளி ஒருவரால் தாக்கப்பட்டு கடுமையான மூளையதிர்ச்சிக்கு உள்ளான சம்பவமும் இந்த ஆய்வில் கவனம் பெற்றுள்ளது.
இந்த வன்முறைகள் காரணமாக மருத்துவப் பணியாளர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதுடன், நோயாளிகளுக்கான சிகிச்சைகளிலும் தாமதம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, பணியிடப் பாதுகாப்பை அதிகரித்தல், போதிய பணியாளர்களை நியமித்தல், வன்முறைச் சம்பவங்களைப் பதிவு செய்யும் முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மனநல ஆதரவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அவசர மருத்துவ சேவைத் துறையினர் கோரியுள்ளனர்.
கனடாவில் உயிர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடும் அவசர மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு தற்போது தேசிய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
