இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்ட “வட மாகாண சட்ட உச்சிமாநாடு – 2026” நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
நிகழ்வில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய சிறப்புரையாற்றியதுடன், சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் சட்டத்தரணி என். பார்த்தீபன் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாநாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல், காணி சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழில்முறை ஒழுக்கநெறிகள், தேசவழமைச் சட்டத்தின் கீழான உரிமை மாற்ற உத்தரவுகள், வெளியேற்றம் மற்றும் காலவரையறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விடயங்கள் தொடர்பான கருத்தமர்வுகள் இடம்பெற்றன.
அத்துடன், உயர் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்கள் மற்றும் வழக்கு விசாரணைக்கு முந்திய சட்ட நடைமுறைகள் தொடர்பான குழு நிலை கலந்துரையாடலும் நடைபெற்றது.
