கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் (NATO) நடவடிக்கைகளுக்குக் கனடா வழங்கும் பங்களிப்பு குறித்து நேட்டோவின் இரண்டாம் நிலைத் தளபதி, தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பென்டகன் மற்றும் கனடிய அரசாங்கம் முதலானவற்றுக்கு இடையே பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் இராணுவத் தயார்நிலை குறித்து, மோதல் வலுத்துள்ள நிலையில், நேட்டோவின் இரண்டாம் நிலைத் தளபதியின் கருத்து வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
நேட்டோவின் இரண்டாம் நிலைத் தளபதியான, பிரித்தானிய விமானப்படைத் தலைமை மார்ஷல் சேர் ஜோன் ஸ்ட்ரிங்கர் (Sir John Stringer), கனடா தனது படைகளை மீளக் கட்டியெழுப்ப முன்னெடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
”ஏனைய நாடுகள் என்ன கூறுகின்றன என்பது குறித்த விவாதத்திற்குள் தாம் செல்ல விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ள ஜோன் ஸ்ட்ரிங்கர், ”லாட்வியாவிலுள்ள (Latvia) பன்னாட்டுப் படைப்பிரிவுக்குக் கணிசமான படைகளை அனுப்பியுள்ள ஒரு நாடாகவே தாம் கனடாவைப் பார்ப்பதாகத்” தெரிவித்துள்ளார்.
நோராட் (NORAD) மற்றும் நேட்டோ அமைப்புகளுக்கான கடமைகளைக் கனடா நிறைவேற்றவில்லை எனவும், குறுகிய காலத்தில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்குமாறும் அமெரிக்க யுத்தத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கனடாவிடம் பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
