கியூபெக் மாகாணத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical cancer) பரிசோதனைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், வீட்டிலேயே சுயமாக மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதிக்கும் கருவிகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கியூபெக்கின் சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு நிறுவனம் (INESSS) கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் வெளியிட்ட இரு அறிக்கைகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சுயபரிசோதனைக்கான மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை வரையறுத்தது.
அத்துடன், இந்த நடைமுறையை மாகாணத்தின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் இணைக்குமாறும் அந்த ஆய்வு நிறுவனம் பரிந்துரைத்திருந்தது.
கியூபெக்கில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதன்மைப் பரிசோதனையாக மனிதப் பாப்பிலோமா வைரஸ் (HPV) பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
25 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை இது வழங்கப்படுகிறது.
இது முன்னர் வழக்கத்தில் இருந்த ‘பாப்’ (Pap) அல்லது சைட்டோலஜி (Cytology) பரிசோதனைக்கு மாற்றாகச் செயற்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சுயபரிசோதனைத் திட்டத்தின் கீழ், சுகாதார நிலையங்களால் வழங்கப்படும் கருவிகளைக் கொண்டு பெண்கள் தமது வீட்டிலோ அல்லது மருத்துவ நிலையத்திலோ சுயமாக மாதிரியைச் சேகரித்துத் திருப்பி அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
