தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலையில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 24ஆம் திகதி பாரம்பரிய தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்க அறிக்கையும் மன்னிப்புக் கோரும் மனுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் அரசியல் ரீதியான சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
