கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள போஸ் (Beauce) பிராந்தியத்தில் நடைபெற்ற நினைவேந்தல் தின (Remembrance Day) நிகழ்வின்போது நிகழ்ந்த விமான விபத்தில், அதன் விமானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள செயின்ட்-ஜோர்ஜஸ் (Saint-Georges) உள்ளூர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நிகழ்ந்தபோது விமானத்தில் விமானி மட்டுமே பயணித்துள்ளதாக கியூபெக் மாகாண காவல்துறையின் (Sûreté du Québec) பேச்சாளர் சார்ஜன்ட் ஓட்ரி-ஆன் பிலோடோ (Sgt. Audrey-Anne Bilodeau) தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் அப்பிராந்தியத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் எனக் காவல்துறை குறிப்பிட்டபோதும், அவரது பெயரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக ஆறு விமானங்கள் இணைந்து வானில் சாகச அணிவகுப்பில் (‘Missing Man formation’) ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக செயின்ட்-ஜோர்ஜஸ் நகரசபை மேயர் மெனோன் பூகி (Manon Bougie) தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்குவதற்காகத் தாழ்வாகப் பறந்து வந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்த ஆறு நிமிடங்களுக்குள் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோதிலும், விமானம் முழுமையாகத் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால் விமானியைக் காப்பாற்ற முடியாமல் போனதாக, தீயணைப்புத் படைத் தலைவர் பிரடெரிக் மோரின் (Frédéric Morin) கவலை வெளியிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய விமானம் உட்பட நிகழ்வில் பங்கேற்ற அனைத்து விமானங்களும் பொதுமக்களால் இயக்கப்படும் தனியார் விமானங்கள் என, காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
