ஒன்ராறியோ மாகாணத்தின் பிராம்ப்டன் (Brampton) நகரில் அமைந்துள்ள ‘ஸ்டெல்லாந்திஸ்’ (Stellantis) நிறுவனத்தின் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையை கவச வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘ரோஷெல்‘ (Roshel) நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்குத் தெரிந்துள்ளதாக, நம்பகமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வதேச வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லாந்திஸ், பிராம்ப்டனில் உள்ள தனது உதிரிப்பாகங்கள் மற்றும் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையை கவச வாகனத் தயாரிப்பாளரான ரோஷெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விற்பனைத் திட்டம் குறித்தும், இரு நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் மத்திய அரசு பல மாதங்களுக்கு முன்பே அறிந்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த தனிப்பட்ட விபரங்களை வெளியிடுவதைத் தவிர்த்துள்ள மத்திய அரசு, தனியார் துறை பேச்சுவார்த்தைகளில் தாம் எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த விவகாரம் நாட்டின் வாகனத் துறை மற்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஸ்டெல்லாந்திஸ் நிறுவனம் தனது கடப்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், கனேடியர்களின் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
