கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, குறைந்த ஊதியப் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்படும் புதிய Labour Market Impact Assessment எனப்படும் LMIA விண்ணப்பங்களின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை நீண்ட கால அடிப்படையில் பணியமர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
மற்றுமொரு முக்கிய மாற்றமாக, வேலையின்மை விகிதம் ஆறு சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுவாக குறைந்த ஊதிய LMIA விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில்லை. எனினும், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன.
தற்போது Early Childhood Educators எனப்படும் சிறுவர் முன்பள்ளிக் கல்வியாளர்களும் இந்த விதிவிலக்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், 2027 மார்ச் 1 முதல் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு சில புதிய மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இந்த மாற்றங்கள் கனடாவில் வேலைவாய்ப்பைத் தேடும் வெளிநாட்டவர்களுக்கும், ஏற்கனவே தற்காலிக வேலை அனுமதியில் பணியாற்றுபவர்களுக்கும் முக்கியமான விடயங்களாகும்.
