கனடாவின் முன்னாள் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper), தனது புதிய நினைவுக் குறிப்பு நூலில் பல முக்கிய அரசியல் விவகாரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
‘ஹியர் ஃபார் கனடா: மெமோயர்ஸ் ஆஃப் தி 22ன் பிரைம் மினிஸ்டர்’ (Here for Canada: Memoirs of the 22nd Prime Minister) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த நூலில், கடந்த கால அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் உள்ளக விவகாரங்கள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போதைய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கனடாவின் மத்திய வங்கி ஆளுநராகப் பதவி வகித்த காலத்தில், அவரைத் தனது அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள தாம் விடுத்த அழைப்பு குறித்த தகவல்களை ஸ்டீபன் ஹார்பர் அந்த நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு கனடா வங்கியின் ஆளுநராக இருந்த மார்க் கார்னியை அரசியலுக்கு அழைத்து, தனது கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பை வழங்கத் தாம் முன்வந்ததாக ஸ்டீபன் ஹார்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஊடகங்களில் கூறப்படுவது போல உடனடியாக நிதி அமைச்சர் பதவியை மார்க் கார்னிக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருக்கவில்லை என்றும், அந்தப் பதவி அப்போது காலியாக இருக்கவில்லை என்றும் அவர் அதில் தெளிவுபடுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் (Liberal leadership) தலைமைப் போட்டியில் கலந்துகொண்ட போது, முன்னாள் பிரதமர் ஹார்பர் தன்னை 2012ஆம் ஆண்டில் நிதி அமைச்சராகப் பணிபுரியக் கோரியதாகத் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்த நிலையிலேயே, ஹார்பரின் நூல் ஊடாக இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
