அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பாம் பீச் கவுண்டியின் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) பிற்பகல் லியர்ஜெட் (Learjet) ரகத் தனியார் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸில் உள்ள ஆஸ்டின்-பெர்க்பிரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் பஹாமாஸில் உள்ள வடக்கு எலுதேரா விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த லேக் வர்த் பீச் பகுதிக்கு அருகில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் (Ron DeSantis), “இது ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவம். ஒரு ஏவுகணை கீழே வந்து விழுந்து பிரமாண்டமாக வெடித்துச் சிதறுவது போல இந்த விபத்து அமைந்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) இந்த விபத்து குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக வீதியோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள சுமார் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இரண்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் பலத்த மழையும் இடியுடன் கூடிய புயலும் நிலவியதாகக் கூறப்படுகிறது.
விமானக் கட்டுப்பாட்டு மையத்துடனான ஒலிப்பதிவின் படி, விமானம் திடீரென நிமிடத்திற்கு பல்லாயிரம் அடிகள் வேகத்தில் கீழ்நோக்கிச் சரிந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
விபத்துக்குச் சற்று முன்னர் விமானி அவசர உதவி கோரியதுடன், “எங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது” எனக் கூறிய கடைசி வார்த்தைகளும் பதிவாகியுள்ளன.
விமானத்தின் செங்குத்தான வீழ்ச்சி விகிதம் ஒரு கட்டத்தில் நிமிடத்திற்கு 32,000 அடிகளைத் தாண்டியதாக தரவுகள் காட்டுவதாக ஃப்ளைட்ரேடார்24 (Flightradar24) தெரிவித்துள்ளது.