மொன்றியல் விமான நிலையம் மற்றும் மருத்துவமனையில் தட்டம்மை நோய் பரவ வாய்ப்புள்ளதாகப் பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குழந்தை ஒன்றிற்குத் தட்டம்மை (Measles) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொன்றியல் பொது சுகாதாரத் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தொற்றுள்ள நிலையில் குறித்த குழந்தை கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மொன்றியல் ட்ரூடோ (Montréal–Trudeau) விமான நிலையத்தின் ஊடாகப் பயணித்து உள்ளதுடன், அடுத்த நாள் காலை மருத்துவமனை அவசரப் பிரிவிற்கும் சென்றுள்ளது.
இம்மாதம் 9 ஆம் திகதி மாலை 6:30 மணிமுதல் இரவு 10:00 மணி வரை விமான நிலையத்தின் சர்வதேச வருகைப் பகுதி, கடவுச்சீட்டுப் பரிசோதனைப் பகுதி, சாமான்களைப் பெற்றுக்கொள்ளும் பகுதி மற்றும் விமான நிலைய வெளிநடப்பாதை ஆகியவற்றில் இந்தக் குழந்தை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:00 மணிமுதல் நண்பகல் வரை சீன்ட்-ஜஸ்டின் (CHU Sainte-Justine) குழந்தைகள் மருத்துவமனையின் அவசரப் பிரிவிலும் குழந்தை இருந்துள்ளது.
குறிப்பிட்ட திகதிகள் மற்றும் நேரங்களில் மேற்கண்ட இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களுக்குத் தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு, கியூபெக்கின் பொது சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
