கியூபெக் மாகாணத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக நகர திட்டமிடலாளர்களுக்கு (urban planners) வரம்பற்ற அதிகாரங்களை (fast-track superpower) வழங்குவதை விட, பொதுமக்களின் கருத்துக்கேட்கும் நடைமுறைகளை (public consultations) மிகவும் பயனுள்ள முறையில் வலுப்படுத்துவதே சிறந்தது என நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் நிலவும் கடுமையான வீட்டுவசதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்கும் வகையில் சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதற்குப் பல உள்ளூராட்சி அமைப்புகள் முற்பட்டு வருகின்றன.
இருப்பினும், இந்த வேகமான அணுகுமுறை நீண்டகால நகர்ப்புற நன்மைகளுக்குப் பதிலாகப் பல குறைபாடுகளை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
”பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கலந்தாய்வுகள், முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களை தாமதப்படுத்துவதற்கான கருவிகள் அல்ல” என்றும், ”அவை திட்டங்களின் தரத்தை மேம்படுத்தும் முக்கிய அங்கங்கள்” என்றும் கியூபெக்கின் நகர திட்டமிடல் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவசரகதியில் முடிவுகளை எடுப்பது, உள்ளூர் மக்களின் உண்மையான தேவைகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் புறக்கணிப்பதற்கு வழிவகுப்பதால், திட்டங்களுக்கு வேகமான அனுமதி அளிக்கும் அதிகாரங்களை வழங்குவதை விடுத்து, மக்கள் தங்கள் கருத்துக்களை எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கும் வகையில் கலந்தாய்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


