வவுனியா வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச்செய்தனர். சபை தவிசாளரது தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டே அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது சபை அலுவலகத்தில் பூட்டப்பட்டுள்ள சோலர் முறைமையில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை திருத்துவதற்காக சபை நிதியில் இருந்து ஒரு தொகையை விடுவிப்பதற்கான பிரேரனையினை தவிசாளர் முன்வைத்திருந்தார்.
அதற்கு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் உட்பட அனேகமான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சோலருக்கான உத்தரவாத காலம் இன்னும் உள்ள நிலையில் எதற்காக சபை நிதியை செலவு செய்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் சபை தவிசாளருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து உறுப்பினர்கள்பலர் சபைக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
குறிப்பாக தமிழரசுக்கட்சி,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி,தேசியமக்கள் சக்தி, தமிழ்தேசியமக்கள் முன்னணி ஆகியவற்றை சேர்ந்த15 உறுப்பினர்கள் மற்றுப் உபதவிசாளர் ஆகியோர் குறித்த தீர்மானத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட உறுப்பினர் ஒருவர் எமது சபை வருமானம் குறைந்த ஒரு சபை. வீதிகளுக்கான மின் குமிழ்களையே பொருத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எனவே உத்தரவாதம் உள்ள நிலையில் சபை நிதியை ஏன் வீணாக செலவளிக்கிறீர்கள் என கேட்டபோது அவர் உரிய பதில் வழங்கவில்லை. தன்னிச்சையாக அதனை வழங்கமுடியும் என கூறினார். எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக சபையின் தவிசாளரின் நிலைப்பாட்டை அறிவதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்திய போதும் அவர் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை.


