கியூபெக் மாகாணத்தில் உள்ள லொங்வே (Longueuil) பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயதான நூரன் ரெசாயி (Nooran Rezayi) என்ற சிறுவனின் மரணத்திற்கு காரணமான பொலிஸ் அதிகாரியின் பெயரை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதற்கு நீதிமன்றம் உடன்பட்டுள்ளது.
எனினும், அந்த அதிகாரியின் பெயரை பகிரங்கமாக வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த ஏனைய பொலிஸாரின் பெயர்களை வெளிப்படுத்துமாறு சிறுவனின் குடும்பத்தினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கில், கியூபெக் மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்றது. சம்பவதினத்தன்று லொங்வேயின் சென்-ஹியூபர்ட் (Saint-Hubert) பகுதியில் உள்ள வீதியோர நடைபாதையில் நூரன் ரெசாயி தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தவேளை, அவசர அழைப்பையேற்று அங்கு வந்த காவல்துறையினர், வருகை தந்த சில வினாடிகளிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது சிறுவன் எவ்வித ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, லொங்வே மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக சிறுவனின் குடும்பத்தினரும், அவருடன் இருந்த ஏனைய சிறுவர்களின் குடும்பத்தினரும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொலிஸ் அதிகாரியின் பெயரை வெளிப்படுத்தினால் அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறி லொங்வே மாநகர சபை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்காகக் குறிப்பிட்ட தகவல்களைப் பெறுவதற்கு, குடும்பத்தினருக்கும் அவர்களின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

