ஜனாதிபதியின் “முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
“முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஊடகங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதுடன், செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவது அவசியம்
ஊடகங்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவற்றின் பங்களிப்பு அளப்பரியது.
குறிப்பாக, யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் முக்கிய பணியாற்றின.
தற்போதைய அபிவிருத்திப் பயணத்தில், ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதுடன், சமூகத்தில் ஆரோக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதைய அபிவிருத்திப் பயணத்தில், ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதுடன், சமூகத்தில் ஆரோக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் என எந்த ஊடகமாக இருந்தாலும், அதன் நம்பகத்தன்மை பேணப்படுவது மிகவும் அவசியமாகும்.
செய்திகளின் தலைப்புகள் சிலவேளைகளில் உள்ளடக்கத்துடன் முரண்படுவதால் மக்கள் மத்தியில் குழப்பமும் ஊடகங்கள் மீதான நம்பிக்கையின்மையும் ஏற்படக்கூடும்.
எனவே, செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். விமர்சனங்களை முன்வைப்பதில் தவறில்லை ஆனால் அவை உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்
ஜனாதிபதியின் “முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை ஆக்கபூர்வமாக வெளியிடுவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்
ஊடகவியலாளர்கள் செய்திகளைத் தேடிச் சென்று தகவல்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உறுதிப்படுத்தி வெளியிடுவது அவசியம். ஊடகத்துறையினருக்குத் தேவையான மேலதிக பயிற்சிகளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கும் மாவட்டச் செயலகம் ஒத்துழைக்கும். ஊடகவியலாளர்களுக்கும் அரச நிர்வாகத்தினருக்கும் இடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலம், மாவட்டத்தில் பொறுப்புணர்வுமிக்க ஊடகச் சூழலை உருவாக்குவதற்கு இச்செயலமர்வு அடித்தளமாக அமையும் என தெரிவித்தார்.
இச் செயலமர்வின் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், “முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினருமான பஸீர் முஹம்மட் றஸாட் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் சாமினி வையலட், யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள், மாவட்ட ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக, பிரதேச செயலகங்களின் துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

