ஐக்கிய அரபு அமீரகத்தின் பிளை டுபாய் (FlyDubai) விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற உதவி விமானி, அந்த விமான நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பே இத்திட்டத்தை வகுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 182 பயணிகளுடன் பயணித்த ‘பிளைடுபாய் எஃப்.இஸட் 1073’ (FlyDubai FZ1073) விமானத்தில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் உதவி விமானி, பிரதான இந்திய விமானியான கப்டன் ஸ்மித் மச்சார் மீது கோடரியால் தாக்குதல் நடத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றுள்ளார்.
காயமடைந்த நிலையிலும் பிரதான விமானி காக்பிட் கதவைத் திறக்க, பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே புகுந்து உதவி விமானியைக் கட்டுப்படுத்தினர்.
இதனால் விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகக் காவலில் உள்ள உதவி விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
டெல் அவிவ் நகருக்குச் சேவைகளை நடத்தும் விமான நிறுவனங்களைத் தேடிப்பிடித்தே அவர் பிளைடுபாய் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் டெல் அவிவ் நோக்கிய மற்றொரு விமானத்தையும் அவர் இயக்கியுள்ளதாகவும், அப்போதே விமானத்தைக் கடத்தி விபத்துக்குள்ளாக்கத் திட்டமிட்ட போதிலும், பின்னர் அந்த முடிவைக் கைவிட்டதாகவும் விசாரணையாளர்களிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை ஆபத்தான “பயங்கரவாதத் தாக்குதல்” என ஐக்கிய அரபு அமீரகம் வர்ணித்துள்ளதுடன், இது தொடர்பான தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்குச் சேவைகளை வழங்கி வரும் அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகளையும் மீளாய்வு செய்ய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

